சாய்ந்தமருதில் எம்மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு – காதர் மஸ்தான் பங்கேற்பு
சாய்ந்தமருதில் எம்மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு – காதர் மஸ்தான் பங்கேற்பு
*பாறுக் ஷிஹான்* அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று (22) எம்மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வரும் இனவாதக் கருத்துகள், மத நல்லிணக்கம் மற்றும் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட இனவாதப் பிரச்சினைகள் மீண்டும் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும், அனைத்து சமூகங்களினதும் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
மேலும், கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை நேர்மை, நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதுடன், கிராம மட்டங்களில் கட்சி அமைப்புகளை வலுப்படுத்தி மக்களுக்கான சேவைகளை விரிவுபடுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்





