மாளிகா விளையாட்டுக் கழகத்தின் புதிய ஜெர்சி மற்றும் 'Super 4 Cricket Trophy – 2026' தொடர் அறிமுக விழா
மருதமுனை மஷூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கோலாகல நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் எம்.எம்.எம். பாமி பிரதம அதிதியாகப் பங்கேற்பு
பாறுக் ஷிஹான்
மாளிகா விளையாட்டுக் கழகத்தின் புதிய ஜெர்சி அறிமுக விழாவும், 'Super 4 Cricket Trophy – 2026' கிரிக்கெட் சுற்றுத்தொடரின் அறிமுக நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை (27) இரவு 9.00 மணியளவில் மருதமுனை மஷூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
விளையாட்டுத் துறையை ஊக்குவித்தல், இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணர்தல் மற்றும் விளையாட்டின் ஊடாகச் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் ஆகிய உயரிய நோக்கங்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சாய்ந்தமருது இளைஞர் அமைப்பாளருமான எம்.எம்.எம். பாமி கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வின் கௌரவ அதிதியாக மாளிகா விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி உத்தியோகத்தருமான எஸ். பஸ்லூன் கலந்து கொண்டார். இதன்போது, மாளிகா விளையாட்டுக் கழகத்தின் புதிய ஜெர்சிகள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டுக்கான 'Super 4 Cricket Trophy' கிரிக்கெட் சுற்றுத்தொடரும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாளிகா விளையாட்டுக் கழகத்தின் பொருளாளரும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம். ரிஸ்னி , கழகத்தின் இணைப்பாளர் ஏ.ஆர்.எம். சர்பீன் , 'ரியல் பிளாஸ்டர்' விளையாட்டுக் கழகத்தின் ஏ.எம். பாயாஸ் , 'ரெட் மெக்ஸ்' பணிப்பாளர் ஏ.என்.எம். ஜலூத் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6ஆம் குறிச்சி இளைஞர் அமைப்பாளர் ரி.எம். ரிலா உள்ளிட்டோருடன் ஏ.எச். நளீம், எம். தௌபீக், எம். ரியால் மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்





